செய்திகள்
கொலையுண்ட சரண்ராஜ்

பாமக பிரமுகர் கொலை- திமுக செயலாளர் மகன் கைது

Published On 2019-07-09 10:22 GMT   |   Update On 2019-07-09 10:22 GMT
அரியலூர் அருகே பா.ம.க. பிரமுகர் கொலையில் தி.மு.க. செயலாளர் மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகே உள்ள அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல். அரியலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருக்கிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் பா.ம.க. ஒன்றிய செயலாளர் கருணாநிதி. இவர்கள் இருவருக்கும் இடையே பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இதனால் இருதரப்பினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. ஒன்றியச் செயலாளரின் மகன் விக்கி மற்றும் அவரின் நண்பர் ராஜா ஆகியோர் ஏலாக்குறிச்சி பெட்ரோல் பங்க்கில் வைத்து மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டனர்.

இந்த வழக்கில் பா.ம.க. செயலாளர் கருணாநிதியின் ஆதரவாளரான செட்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவரை முக்கிய குற்றவாளியாக கருதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவரும் பா.ம.க.வில் பொறுப்பில் இருந்து வந்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் சில மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு கள்ளூர் பாலம் அருகேயுள்ள கருப்பசாமி கோவிலின் முன்பு அந்த வழியாக வந்த சரண்ராஜை வழிமறித்தனர். பின்னர் அவரை உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அரியலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோதிவேலின் மகன் பூவரசன் மற்றும் அவரது ஆதரவாளர்களான சூர்யா, அஜித், முத்துப்பாண்டி, மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவான ஜோதிவேலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News