செய்திகள்
கோப்புப்படம்

தண்ணீர் பிரச்சனை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- கே.எஸ். அழகிரி

Published On 2019-06-17 04:55 GMT   |   Update On 2019-06-17 04:55 GMT
தமிழ்நாட்டில் மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மற்றும் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
வேலூர்:

வேலூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கு தேவையான தண்ணீரை இந்த அரசால் கொடுக்க முடியவில்லை. அரசின் அடிப்படை கடமை மக்களுக்கு தண்ணீர் கொடுப்பது. ஆனால் அரசின் சரியான திட்டமிடல் இல்லாததே 100 ஆண்டுகாலம் இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்குகிறார்கள். இது அரசுக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம். தமிழ்நாட்டில் மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வுமையம் வடகிழக்கு பருவமழை பொய்க்கும், தென்மேற்கு பருவமழை குறைவாக இருக்கும் என்று அறிவித்திருந்தது. அப்போதே தமிழக அரசு ஏரி, குளங்களை ஆழப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் ஏரிகளில் குறைந்த அளவு தண்ணீராவது இருக்கும்.

அண்டை மாநில முதல்வர்களை, நமது முதல்-அமைச்சர் சந்தித்து பேசியிருக்கலாம், அப்படி பேசியிருந்தால் அவர்கள் தண்ணீர் கொடுத்திருப்பார்கள். ஆனால் இந்த அரசு ஒன்றை தலைமையா, இரட்டை தலைமையா என்பதிலும், யாருக்கு மத்திய மந்திரி பதவி வாங்குவது என்பதிலும் குறியாகவும், பொறுப்பற்ற அரசாகவும் இருக்கிறது.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மதிப்பு குறைவான மடிக்கணினி வழங்கப்படுவதாகவும், இதில் ரூ.300 கோடிக்கு தவறு நடந்துள்ளதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது. மடிக்கணினி கொள்முதல் செய்வதற்கு எதிர்க்கட்சி தலைவர்களை கொண்டு கமிட்டி அமைக்க வேண்டும்.

ராகுல்காந்தியை தவிர்த்து இன்னொருவர் காங்கிரஸ் கட்சியை இயக்கமுடியாது. அவர்தான் தலைவராக இருக்கவேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும். கோர்ட்டு எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம். 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் எத்தனையோ பேர் இருக்கையில் அவர்கள் 7 பேரை மட்டும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் உள்ளநோக்கம் இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. குறிப்பாக அனைத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவோம். இது குறித்து வருகிற 21-ந் தேதி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News