செய்திகள்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-05-09 08:44 GMT   |   Update On 2019-05-09 08:44 GMT
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். #RajivGandhiAssassinationcase #OPS
மதுரை:

மதுரை விமான நிலையத்தில் இன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனைத்து மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செய்துள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அவரது வழியிலான தற்போதைய அரசு அந்த திட்டங்களை தொடர்ந்து வருவதோடு, கூடுதல் திட்டங்களையும் மக்களுக்கு அளித்து வருகிறது.

இதன் காரணமாக அ.தி.மு.க. அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், நடக்க இருக்கிற 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

அ.தி.மு.க.வில் நல்ல சூழ்நிலை நிலவி வருகிறது. மறு வாக்குப்பதிவு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளித்துள்ளது.

வாக்குப்பதிவு எந்திரத்தின் ஒப்புகை சீட்டு குளறுபடி காரணமாக மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து தமிழக ஆளுநரை தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பாலியல் குற்றங்கள் குறித்த புகார் உள்ளது. இதனை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள், பா.ஜனதா மீதான மக்கள் அதிருப்தி, அ.தி.மு.க.வின் வெற்றியை பாதிக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.

உங்கள் யூகங்களுக்கு எல்லாம் பதில் கூற முடியாது என ஓ.பி.எஸ். கூறிச் சென்றார். #RajivGandhiAssassinationcase #OPS

Tags:    

Similar News