செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மே தினத்திற்கு விடுமுறை அளிக்காத 125 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Published On 2019-05-04 13:44 IST   |   Update On 2019-05-04 13:44:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மே தினத்திற்கு விடுமுறை அளிக்காத 125 நிறுவனங்கள் மீது மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.ரவிஜெயராம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.ரவிஜெயராம் தலைமையில் பரங்கிமலை துணை ஆய்வாளர் மனோஜ் சியாம்சுந்தர், உதவி ஆய்வாளர்கள் பா.மாலா (காஞ்சீபுரம்), த.பொன்னிவளவன் (செங்கல்பட்டு), பிரபாகரன் (மதுராந்தகம்), நாகராஜன் (தாம்பரம்), ப.செந்தில்குமார் (பரங்கிமலை) ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் மேதினத்தன்று விடுமுறை விடப்பட்டுள்ளதா? பணியாளர்கள் பணிபுரிய அனுமதிக்கும் பட்சத்தில் முன் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் 29 கடைகள், 86 ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட 125 நிறுவனங்களில் விடுமுறை வழங்கப்படவில்லை. எனவே இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News