செய்திகள்

தர்மபுரியில் நள்ளிரவில் ஜெயில் சூப்பிரண்டு-இன்சூரன்ஸ் அதிகாரி வீட்டில் கொள்ளை

Published On 2019-04-24 04:48 GMT   |   Update On 2019-04-24 04:48 GMT
தர்மபுரியில் ஜெயில் சூப்பிரண்டு-இன்சூரன்ஸ் அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி:

தர்மபுரி அன்னசாகரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவர் சிறை துறை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலைச்செல்வி. நேற்று இரவு வீட்டின் ஒரு அறையில் சண்முகம், ஹாலில் அவரது மனைவியும் தூங்கி கொண்டு இருந்தனர்.

நள்ளிரவு 1 மணி அளவில் கொள்ளை கும்பல் திறந்து இருந்த ஜன்னல் வழியாக கையைவிட்டு கதவின் தாழ்பாளை திறந்து உள்ளே புகுந்தனர். கலைச்செல்வி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் செயினை வெட்டி எடுத்தனர். அவர் மஞ்சள் கயிற்றில் தாலிச்சரடு அணிந்து இருந்தார். அதை வெட்டி எடுக்க முயன்றபோது அவர் விழித்துக்கொண்டு சத்தம் போட்டார். உடனே கொள்ளைளயர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் வந்து பார்த்தபோது வீட்டின் வெளியே யாரும் இல்லை.

இதே கொள்ளையர்கள் கலைச்செல்வி வீட்டில் கொள்ளையடிப்பதற்கு முன்பு இவர்களது வீட்டிற்கு எதிரே குடியிருந்த செல்வம் என்பவரின் வீட்டு கதவையும், பூட்டையும் உடைக்க முயற்சி செய்தனர் முடியவில்லை.

தர்மபுரி பாரதிபுரத்தில் நியூ இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரி அசோகன் வீட்டில் கொள்ளை நடந்து உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

பாரதிபுரம் டி.ஏ.எம்.எஸ். காலனி அருகே வசிப்பவர் அசோகன் (52). இவரது மனைவி கர்லின்ராஜ். இவர் மத்திய கூட்டுறவு வங்கியில் மானேஜராக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இருவரும் கீழ்வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். மாடியில் நள்ளிரவு 2.30 மணிக்கு கொள்ளையர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ஹோம் தியேட்டர் பிளேயர், 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 60 ஆயிரம் ஆகும்.

இவர்கள் வீட்டில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு 6 பவுன் நகை கொள்ளை போனது. இதேபோல இவர்களது பக்கத்து வீடுகளில் வசித்த 2 பேரின் வீடுகளிலும் கொள்ளை நடந்தது. இந்த கொள்ளையில் இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை. தற்போது மீண்டும் கொள்ளை நடந்து உள்ளது.

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News