செய்திகள்

திருச்சி வீராங்கனை கோமதி தங்கம் வென்று சாதனை- கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2019-04-23 08:07 GMT   |   Update On 2019-04-23 08:07 GMT
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை கோமதியின் சொந்த ஊரில் கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். #AsianAthleticChampionship #Gomti
திருச்சி:

கத்தார் நாட்டில் தோகாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

சாதனை படைத்த கோமதியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள முடிகண்டம் ஆகும். இவரது தந்தை மாரி முத்து, தாய் ராஜாத்தி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். லதா, திலகா என்ற இரண்டு சகோதரிகளும், சுப்பிரமணி என்ற சகோதரரும் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நாசரேத்தில் பள்ளி படிப்பை முடித்த கோமதி பின்னர் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மற்றும் சென்னை செயிண்ட் ஜோசப் கல்லூரியில் உயர்கல்வி படிப்பை முடித்தார். பின்னர் வருமான வரித்துறையில் வேலை கிடைத்து பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.

சிறுவயதில் இருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட கோமதி கடந்த 2013-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். தற்போது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதனை கோமதியின் சொந்த ஊரான முடிகண்டம் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். இதுபற்றி அவரது சகோதரர் சுப்பிரமணி கூறுகையில், எனது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கோமதியின் பயிற்சியாளரும் இறந்து விட்டார்.

இருந்த போதிலும் மனம் தளராமல் சிறந்த பயிற்சி பெற்று தற்போது கோமதி சாதனை படைத்துள்ளார். இது அவரது தன்னம்பிக்கைக்கும், பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி. எங்கள் ஊருக்கு சரியான பஸ் வசதி கிடையாது. ஆனாலும் கோமதி பயிற்சிக்காக தினமும் 15 கி.மீ. தூரம் வரை நடந்தே செல்வார். அதுவே அவரது உடற்பயிற்சிக்கு உந்து சக்தியாக இருந்தது.

அவரது சாதனை இந்தியாவிற்கு மட்டுமல்ல, திருச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க கூடியதாகும். #AsianAthleticChampionship #Gomti
Tags:    

Similar News