செய்திகள்

போடி அருகே வினோதம்- ஓட்டுக்கு பணம் வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியல்

Published On 2019-04-17 10:15 GMT   |   Update On 2019-04-17 10:15 GMT
போடி அருகே ஓட்டுக்கு பணம் வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அ.ம.மு.க. சார்பில் தங்கதமிழ் செல்வனும் களத்தில் உள்ளனர்.

இதனால் தேனி பாராளுமன்ற தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. வெற்றியை எட்டி பறிப்பதில் 3 கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போடி டவுன் 1-வது வார்டு புதூர் பகுதியில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக தெரிகிறது. பணம் பெற்றவர்கள் இது குறித்து மற்றவர்களிடம் தெரிவிக்கவே பணம் கிடைக்காதவர்கள் போடி-குரங்கணி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரிடம் ஒரு தரப்பினருக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டு எங்களுக்கு பணம் தரவில்லை என கூறினர்.

இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த போலீசார் ஓட்டுக்கு பணம் வாங்குவது சட்டப்படி குற்றமாகும். அதற்காக சாலை மறியல் ஈடுபடக்கூடாது என அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News