செய்திகள்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Published On 2019-04-13 10:25 GMT   |   Update On 2019-04-13 10:25 GMT
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதையொட்டி இன்று கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
கன்னியாகுமரி:

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் வெளிநாடு, வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

நேற்றுடன் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். கோடை விடுமுறை விடப்பட்டதையொட்டி இன்று கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று காலை சூரிய உதயத்தை பார்ப்பதற்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி மகிழ்ந்தனர்.

காலை 6 மணி முதல் பூம்புகார் படகுத்துறை முன்பு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். படகு போக்குவரத்து காலை 8 மணிக்கு தொடங்கியது. 2 மணி நேரம் காத்து நின்று சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் பாறைக்கு 3 படகுகள் இயக்கப்பட்டது. கடலில் நீர்மட்டம் குறைவு காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டல், விடுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க குடை பிடித்தவாறு சென்றனர். இளநீர், தர்பூசணி, நுங்கு ஆகியவை கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.


Tags:    

Similar News