செய்திகள்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published On 2019-04-13 06:09 GMT   |   Update On 2019-04-13 06:09 GMT
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூறினார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
எடப்பாடி:

சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டினையே உதாரணமாக கூறலாம். கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில், மதுரை மாநகருக்குள் நுழையமுடியாமல் இருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது மதுரை நகரில் அதிகாலையில் எந்த ஒரு அச்சமும் இன்றி நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதுவே தற்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதற்கு முன் உதாரணமாக கூறலாம். மு.க.ஸ்டாலின் தினந்தோறும் மிக தரக்குறைவான வார்த்தைகளால் என்னை திட்டி பிரசாரம் செய்து வருகிறார்.

அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற நிலையினை அறிந்து பண்புடன் பேசவேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மக்கள் நலம் காக்கும் சிறப்பான கூட்டணி. ஆனால் தி.மு.க சந்தர்ப்பவாத கூட்டணியாக அமைத்துள்ளது. தி.மு.க மக்கள் நலனை ஒருபோதும் கருத்தில் கொண்டதில்லை. இதற்கு உதாரணமாக அண்மையில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரூ.1000 வழங்கியதை தடுக்க பல்வேறு முயற்சி செய்தததையே கூறலாம்.

அதேபோல் தமிழக ஏழை தொழிலாளர்களுக்கு அரசு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்து தோல்வி கண்டுள்ளனர்.

நான் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினத்திலிருந்து, மாநிலம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பெரும் பகுதி மு.க.ஸ்டாலினால் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக தூண்டப்பட்டவையாகும்.

இப்போராட்டங்களுக்கு உரிய முறையில் தீர்வுகண்டு தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க சூழ்ச்சிகரமான தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. கடந்த காலத்தில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் அளிப்பதாக கூறிய தி.மு.க.வினர் தமிழகத்தில் எத்தனை நபர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கினார்கள் என கூறமுடியுமா?

அதே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் பிரதமர் வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்யும்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என கூறி பிரசாரம் செய்துள்ளார்.

தமிழகத்தை பாலைவனமாக மாற்றும் எண்ணம் கொண்டவருக்கு நாம் வாக்களிக்கலாமா? தமிழக மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

விரைவில் நகர மற்றும் கிராமப்புற பகுதியில் வாழும் வீடு இல்லாத குடும்பங்களுக்கு, அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். பொள்ளாச்சியில் நடைபெற்ற மனித தன்மை அற்ற அந்த நிகழ்வினை வன்மையாக கண்டிக்கிறோம். அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தி அரசு கடுமையான தண்டனையை பெற்றுத்தர தயாராக உள்ளது.

எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக்கல்லூரி, 11 கிலோ மீட்டர் தூர புறவழிச்சாலை, புதிய குடிநீர் திட்டம், புதிய நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம், மின்வாரிய கோட்ட அலுவலகம் மற்றும் சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலங்கள், புதிய தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதிய கால்நடை மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கிய அ.தி.மு.க. அரசின் மக்கள் நலத்திட்டப்பணிகள் தொடர்ந்திடவும், காவிரி உபரி நீரினை கொண்டு எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை நிரப்புவதற்கான புதிய பாசனத்திட்டத்தினை நிறைவேற்றிடவும், நதி நீர் இணைப்புத் திட்டத்தின் மூலம் காவிரி கோதாவரி ஆற்றினை இணைப்பதன் வாயிலாக தமிழகம் முழுவதும் பாசன வசதி பெருகும்.

இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #EdappadiPalaniswami

Tags:    

Similar News