செய்திகள்

எடப்பாடிக்கு கருணாநிதி மீது திடீர் பாசம் ஏன்? - வைகோ கேள்வி

Published On 2019-04-11 10:26 GMT   |   Update On 2019-04-11 10:26 GMT
எடப்பாடிக்கு கருணாநிதி மீது திடீர் பாசம் ஏன்? என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். #LokSabhaElections2019 #Vaiko
ஈரோடு:

ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் பகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

மத்தியில் உள்ள ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும். மத்திய அரசு பாசிச வெறியாட்டம் ஆடிவருகிறது.

மகாத்மா காந்தியின் உருவபொம்மையை வைத்துக்கொண்டு ஒரு கும்பல் துப்பாக்கியால் சுடுகிறது. கோட்சேக்கு நாடு முழுவதும் சிலை வைக்கப்போவதாகவும் அந்த கும்பல் கூறுகிறது. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? வேடிக்கைதான் பார்த்தது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறியவரே துணை முதல்வர் ஓ.பி.எஸ்.தான் அவரிடம் விசாரணை நடத்த இந்த அரசு தயாரா? இன்று கலைஞர் மீது எடப்பாடிக்கு திடீர் பாசம் வந்துள்ளது. அவரை பற்றியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார். ஏதோ விசாரணை நடத்தப் போகிறாராம். கலைஞரை ஸ்டாலின் பெற்ற பிள்ளையைபோல் பார்த்து கொண்டார். ஏன்.. பிரதமர் மோடி உள்பட அனைவரும் அவரை பார்த்து சென்றவர்கள்தானே?

கலைஞர் மறைந்த பிறகு ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் மெரினாவில் இடம் கேட்டு வந்தார்களே... முடியாது என்று சொன்னவர்கள்தானே... நீங்கள்? இப்போது மட்டும் கலைஞர் மீது பாசம் வந்துவிட்டதா?

தி.மு.க. வக்கீல்கள் போராடி வாதாடி மெரினாவில் இடம் வாங்கி கொடுத்தார்கள். தமிழகத்தில் 18 சட்டசபை இடைத்தேர்தலோடு மேலும் 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் மத்தியில் மட்டுமல்ல... மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும்.

இவ்வாறு வைகோ பேசினார்.  #LokSabhaElections2019 #Vaiko



Tags:    

Similar News