செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுடன் தி.மு.க.வின் அத்தியாயம் முடியப்போகிறது- ராமதாஸ் பேச்சு

Published On 2019-03-31 10:54 GMT   |   Update On 2019-03-31 11:18 GMT
பாராளுமன்ற தேர்தலுடன் தி.மு.க ஆளுங்கட்சியாக வரப்போவதில்லை. தி.மு.க.வின் அத்தியாயம் முடியப்போகிறது என்று டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார். #ramadoss #dmk #parliamentelection

விருத்தாசலம்:

கடலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விருத்தாசலத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு, அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பேசினார்.

அ.தி.மு.க. தலைமையில் பலமான வெற்றி கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி கட்சியினர் பாகுபாடின்றி வெற்றிக்காக பாடுபட்டு வருகிறார்கள். அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.

இந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, தமிழக உரிமையை டெல்லியில் மீட்டெடுக்கும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை தேர்தல் முடிந்த உடன் நிறைவேற்றுவோம்.

தி.மு.க ஆளுங்கட்சியாக வரப்போவதில்லை. தி.மு.க.வின் அத்தியாயம் முடியப்போகிறது. அதனால் அரசு ஊழியர்கள் தவறான முடிவை எடுக்க வேண்டாம். அரசு ஊழியர்கள் தவறு செய்ய மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ராமத்தம், திட்டக்குடியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அவர் மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறி அவதூறு பரப்பி வருகிறார். அதனை மக்கள் நம்ப மாட்டார்கள்.

தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரே‌ஷன் கடை, நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை மூடிவிடுவார்கள். மேலும் உரமானியத்தையும் ரத்து செய்து விடுவார்கள்.

டாஸ்மாக் கடைகளால் தான் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். டாஸ்மாக் கடை திறந்து இருக்கும் நேரத்தை படிப்படியாக குறைத்து, பூரண மதுவிலக்கு கொண்டு வரநடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைப்போல் தமிழகத்திலும் விவசாயிகளுக்காக தனியாக ஒரு பட்ஜெட் போட வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #ramadoss #dmk #parliamentelection

Tags:    

Similar News