செய்திகள்
கோப்புப்படம்

வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டி- அய்யாக்கண்ணு

Published On 2019-03-30 07:33 GMT   |   Update On 2019-03-30 07:33 GMT
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிரதமரை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவது உறுதி என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார். #TNFarmers #Ayyakannu #PMModi
திருச்சி:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பழனியப்பன், பட்டீஸ்வரன், தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், 60 வயதான விவசாயிகளுக்கு மாதம் ரூ.6ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்ரக விதைகளை தடை செய்ய வேண்டும், தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகள் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளை தேசிய கட்சிகள்தான் நிறைவேற்ற முடியும். விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாத பா.ஜனதா அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தமிழக விவசாயிகள் 111 பேர் அவரை எதிர்த்து போட்டியிட உள்ளோம்.

வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக 24-ந்தேதி வாரணாசி செல்ல இருக்கிறோம். வறுமையால் வாடும் விவசாயிகளால் வாரணாசி செல்வதற்கும், வேட்பு மனுதாக்கல் செய்வதற்கும் பணமில்லை. அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி, தனது கணவரின் உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய பணமில்லாததால் வெட்டியானுக்கு பணம் கொடுக்க வாரணாசியில் பிச்சை எடுத்தது போல, நாங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய டெபாசிட் பணத்திற்காக வாரணாசியில் பிச்சை எடுத்து அதனை கட்ட முடிவு செய்துள்ளோம்.

வருகிற 6-ந்தேதிக்குள் விவசாயிகளை அழைத்து பிரதமர் நரேந்திரமோடியும், ராகுல்காந்தியும் பேச வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்க வேண்டும். வாக்குறுதி அளித்தால் போட்டியில் இருந்து விலகி கொள்வோம். இல்லையென்றால் பிரதமரை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவோம். அகோரி வேடத்தில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்வோம்.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது பற்றி அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும் போது, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி எங்களின் கோரிக்கையை மோடி நிறைவேற்றாவிட்டால் வாரணாசியில் அவரை எதிர்த்து போட்டியிடுவது உறுதி என்றார். #TNFarmers #Ayyakannu #PMModi
Tags:    

Similar News