செய்திகள்

தம்பிதுரைக்கு ஆதரவாக செயல்படும் டி.எஸ்.பியை மாற்ற வேண்டும் - செந்தில்பாலாஜி மனு

Published On 2019-03-27 10:29 GMT   |   Update On 2019-03-27 10:29 GMT
தம்பிதுரைக்கு ஆதரவாக செயல்படும் டி.எஸ்.பியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு செந்தில்பாலாஜி மனு அளித்துள்ளார். #SenthilBalaji
சென்னை:

கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வேட்புமனு தாக்கலின்போது, 100 மீட்டருக்கு வெளியே இல்லாமல் கலெக்டர் அலுவலகம் வாயில் முன்பாகவே 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்களுடன் மைக்கில் பிரசாரம் மேற்கொண்டார்.

காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய வருகின்றபோது வேண்டுமென்றே அ.தி.மு.க. தொண்டர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்து பிரச்சினையை ஏற்படுத்தினார். இது சம்பந்தமாக பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கும்மராஜாவிடம் தேர்தல் விதிமுறை மீறல் சம்மந்தமாக நான் நேரடியாக முறையீடு செய்தேன்.

அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் தம்பி துரையின் தேர்தல் விதிமுறை மீறல்களுக்கு துணையாகவே செயல்பட்டார். இவர் கரூர் மாவட்டத்திலேயே உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த அனைத்து அரசியல் பிரமுகர்களுடனும் தொடர்பு உள்ளது.

இவர் கரூர் மாவட்டத்தில் பணியில் இருந்தால் நியாயமான தேர்தலை நடத்த இயலாது. எனவே விதி மீறல்களுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கும்மராஜாவை பாராளுமன்றம் தேர்தல் முடியும் வரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் நகல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, கரூர் தேர்தல் அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. #SenthilBalaji
Tags:    

Similar News