செய்திகள்

வேலூரில் குண்டு வீச்சு - நாகர்கோவில் வாலிபர் கைது

Published On 2019-03-26 06:17 GMT   |   Update On 2019-03-26 06:17 GMT
வேலூரில் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #petrolbombing

வேலூர்:

வேலூரில் தோட்டப்பாளையத்தில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தப்பிய கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் பாபுராவ் தெருவை சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி. இவருடைய மகன்கள் கோகுல் (வயது 30), தமிழ்மணி (28) ஆகியோர் நேற்று முன்தினம் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் அருகே காரை நிறுத்தி, அதில் அமர்ந்தபடி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென காரின் மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து கார் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தோட்டப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கோகுல் தரப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகுல் தரப்பினர் அங்கு சென்றனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. ஒருவருக்கொருவர் பீர் பாட்டில், கற்களை எடுத்து வீசி தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் இருந்த ஒரு விடுதியின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளையும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்களையும் அடித்துதுவம்சம் செய்தனர்.

இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பிரதாப், சசி, சின்னஅப்பு, ராஜி உள்பட 7 பேர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை விசாரிக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கை வெவ்வேறு கோணங்களில் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தோட்டப்பாளையம் அருகே உள்ள காட்பாடி சாலையில் வடக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கினர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவரை அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

அவரை சோதனை செய்தபோது அவரிடம் 1½ அடி நீளமுள்ள 2 கத்திகள் இருந்தன. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அவர் நாகர்கோவிலை சேர்ந்த செல்வம் (33) என்பது தெரியவந்தது. இவருக்கு இந்த மோதல் சம்பவத்தில் தொடர்பு உள்ளது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #petrolbombing

Tags:    

Similar News