செய்திகள்

அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் பறக்கும் படை சோதனையில் ரூ.6 லட்சம் பறிமுதல்

Published On 2019-03-20 05:22 GMT   |   Update On 2019-03-20 05:22 GMT
அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.6 லட்சம் பணம் மற்றும் 23 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentaryElections
குளித்தலை:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் பகுதியில் தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கல்லாத்தூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற இரு சக்கர வாகனத்தில் மேலணிகுழியை சேர்ந்த தனியார் நுண்கடன் நிறுவன ஊழியர் மணிகண்டன் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.39 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் அரியலூர்-பெரம்பலூர் சாலை அல்லிநகரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற 23 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.76 ஆயிரம் ஆகும்.

மேலும் இதே குழுவினர் பேரளி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.57,200 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல கொரப்பாளையம் பிரிவு கரூர்- திருச்சி புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் போலீசார், அதிகாரிகள் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக கரூர் இனங்கூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர், கேரள மாநிலம் பையனூரில் வாழைத்தார்களை இறக்கி விட்டு மினி லாரியில் வந்தார். அதில் சோதனையிட்ட போது அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1.32 லட்சம் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திருச்சி சிறு காம்பூரை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் கேரள மாநிலம் கம்மநாட்டுக்கரையில் வாழைத்தார்களை இறக்கி விட்டு மினிலாரியில் திருச்சி முக்கொம்புக்கு திரும்பி கொண்டிருந்தார். அவரது லாரியில் சோதனையிட்ட போது ரூ.1.61 லட்சம் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷானவாஸ் என்பவர் மினி லாரியில் வாழைத்தார்களை ஏற்றுவதற்காக திருச்சி பெட்ட வாய்த்தலைக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். மேலும் அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1.90 லட்சம் எடுத்து வந்தார். அந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.4.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தேர்தல் அலுவலரான குளித்தலை கோட்டாட்சியர் லியாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. #ParliamentaryElections
Tags:    

Similar News