செய்திகள்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் - கைதான ஆசிரியர்கள் 9 பேர் பணியிடை நீக்கம்

Published On 2019-01-27 10:14 IST   |   Update On 2019-01-27 10:35:00 IST
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. #JactoGeo

திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காலையில் கைது செய்யப்படும் அவர்கள் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்படுகின்றனர். இந்த போராட்டத்தினால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபடுவோர்களை உடனடியாக பணிக்கு செல்லவேண்டும். இல்லையென்றால் கைது செய்யப்பட்டு சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டது.

அதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதனைஅறிந்த ஜாக்டோ-ஜியோ திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் 10 பேர் திண்டுக்கல் பஸ்நிலையம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர்.

 


அங்கு சென்ற போலீசார் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தவிர சாலைப்பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ், ராமன், ஊராட்சி செயலர்கள் பெருமாள், கதிரேசன், வருவாய் ஆய்வாளர் முகமதுஅப்துல்காதர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான இவர்கள் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நிர்வாகிகள் கைது செய்யப்படுவதை அறிந்த ஜாக்டோ-ஜியோ பொருப்பாளர்கள், அரசு ஊழியர்சங்கம், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வீடுகளில் தங்குவதை தவிர்த்து தலைமறைவாக உள்ளனர்.

இதற்கிடையில் கைதான ஆசிரியர்கள் வீரபத்திரபாபு, ஜேம்ஸ், சேவியர், ராஜேந்திரன், பே.செல்லமுத்து, பா.செல்லமுத்து, மருதுமாருகன், முருகேசன், சரவணன் ஆகிய 9 பேரை பணியிடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. #JactoGeo

Tags:    

Similar News