செய்திகள்

விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் மறியல்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2,385 பேர் மீது வழக்கு

Published On 2019-01-25 05:39 GMT   |   Update On 2019-01-25 07:31 GMT
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2,385 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தார்கள். #JactoGeo

விழுப்புரம்:

புதிய ஓய்வுஊதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பும் மற்றும் கள்ளக்குறிச்சியிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.

விழுப்புரத்தில் சட்ட விரோதமாக ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தை நடத்திய ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 170 பேர் மீதும், கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்திய 150 பேர் மீதும் போலீசார் வழக் குபதிவு செய்தனர்.

இதேபோல் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி நேற்று கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுதலை செய்தனர்.

இந்நிலையில் தடையை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 2,065 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,385 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தார்கள்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்ப அரசு உத்தரவிட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் நேற்று பணிக்குவராத 381 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

அதில், உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதேபோல் பிற துறைகளிலும் பணிக்கு வராதவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. #JactoGeo

Tags:    

Similar News