செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 5,000 பேர் கைது

Published On 2019-01-23 07:15 GMT   |   Update On 2019-01-23 07:15 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். #JactoGeo

திண்டுக்கல்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு வட்டக்கிளை ஒருங்கிணைப்பாளர்கள் குழந்தை ராஜ், பெரியசாமி, ஹெல்மா பிரியதர்சன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்தங்கம், பாண்டி, கேந்திரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ ஜியோ உயர் மட்டக்குழு உறுப்பினர் ஞானதம்பி, சிறப்புரையாற்றினார். துரைராஜ் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து பஸ் நிலையம் நோக்கி பேரணியாக வந்து மறியலில் ஈடுபட முயன்றனர். 1800க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதே போல் நத்தம் யூனியன் அலுவலகம் முன்பாகவும், வேடசந்தூர் ஆத்து மேடு பகுதியிலும், ஒட்டன்சத்திரம் யூனியன் அலுவலகம் முன்பாகவும், பழனி தாலுகா அலுவலகம் முன்பாகவும், செம்பட்டி, நிலக்கோட்டையில் யூனியன் அலுவலகம் முன்பாகவும், கொடைக்கானலில் மூஞ்சிக்கல் பஸ் நிலையம் பகுதியிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெண்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.  #JactoGeo

Tags:    

Similar News