செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் பழிக்குப்பழி வாங்க 3 பேர் கொலை

Published On 2019-01-20 07:14 GMT   |   Update On 2019-01-20 07:14 GMT
கும்மிடிப்பூண்டியில் பழிக்குப்பழி வாங்க 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள மா.பொ.சி.நகரை சேர்ந்தவர் ரமேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஆகாஷ் (வயது17). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர், கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்வதை நிறுத்தி விட்டு வீட்டிலேயே இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று இரவு அவர் ரெயில் நிலையத்தில் இருந்து ம.பொ.சி. நகர் செல்லும் சாலையில் நண்பர்களான கும்மிடிப்பூண்டி திருக்குளம் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் விமல் (21), சென்னை தண்டையார்பேட்டை திடீர் நகரைச்சேர்ந்த சேகர் மகன் சதிஷ் என்ற வாந்தி சதிஷ் (26) ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது 8 பேர் கும்பல் அவர்களை சுற்றிவழைத்து 3 பேரையும் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் ஆகாஷ், சதீஷ், விமல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

கொலையுண்ட 3 பேரின் உடல்கள், அப்பகுதியில் ரெயில் நிலையத்தை யொட்டியும், குடியிருப்புகளுக்கு மத்தியிலும் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு தனித்தனியாக ரத்தவெள்ளத்தில் ரோட்டில் கிடந்தது.

சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தையொட்டி ஆள்நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் மர்ம கும்பல் 3 பேரை சர்வசாதாரணமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் ஆகியோர் விசாரணை நடத்தினர். 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

3 பேர் கொலையால் கும்மிடிப்பூண்டி பகுதி முழுவதும் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதத்தை தடுக்க 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் உடல்கள் வைக்கப்பட்டுள்ள பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியிலும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி கும்மிடிப்பூண்டி மா.பொ.சி. நகரைச் சேர்ந்த ஷாஜகான் (28) என்பவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருந்தார். மின்சார ரெயிலில் பொருட்கள் விற்பனை செய்யும் தகராறில் இந்த கொலை நடந்து இருந்தது.

இந்த கொலை வழக்கில் தற்போது கொலையுண்ட விமல், சதீஷ் ஆகியோர் குற்றவாளிகள் ஆவர். எனவே இந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 3 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த 3 கொலைகள் நடந்ததா? கஞ்சா பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.

கொலையாளிகள் கூலிப்படையாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம், திருவள்ளூர் சென்னையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News