செய்திகள்

ஈரோட்டில் 19-ந்தேதி ஜல்லிக்கட்டு - மாடுபிடிக்க தயாராகி வரும் மாடுபிடி வீரர்கள்

Published On 2019-01-16 11:20 IST   |   Update On 2019-01-16 11:20:00 IST
ஈரோட்டில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் வரும் 19-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. #Jallikattu
ஈரோடு:

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கும்.

தென் தமிழகத்தில் நடந்து வரும் இந்த ஜல்லிக்கட்டு இப்போது வட தமிழகத்திலும் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு கோவையில் பாலக்காடு மெயின் ரோட்டோரம் முதன் முதலாக ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஆண்டு ஈரோட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோட்டில் முதன்முறையாக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் வரும் 19-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது.

இதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் தயார் செய்யப்பட்டு வாடிவாசலும் அமைக்கப்பட்டு உள்ளது.

மாடுகள் பாய்ந்துவரும் இடமும் தயாராகி இரு புறமும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டை பார்த்து மகிழவும் இடம் தயாராக அமைக்கப்பட்டு தடுப்பு கம்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

ஈரோட்டில் முதன் முதலாக ஜல்லிக்கட்டு நடக்க இருப்பதையொட்டி மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள். இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் பங்கேற்க பெயர் கொடுத்து உள்ளனர். இவர்கள் தற்போது அதற்கான பயிற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் ஜல்லிக்கட்டு முதன்முறையாக ஈரோட்டில் நடக்க இருப்பதையொட்டி அதை நேரில் காண பொதுமக்களும் ஆர்வமாக உள்ளனர்.

ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்கள்.

மேலும் மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண்கிறார்கள். #Jallikattu

Tags:    

Similar News