செய்திகள்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தவித்த மதுரை, தென்காசி மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

Published On 2019-01-09 05:26 GMT   |   Update On 2019-01-09 05:26 GMT
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தவித்த மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த 4 மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

திண்டுக்கல்:

மதுரை கே.புதூரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கவின்குமார் (வயது16). இவனது நண்பர்கள் குணா (16), சந்தோஷ் (16). இவர்கள் 3 பேரும் 10-ம் வகுப்பு படித்தவர்கள். தற்போது கவின்குமார் பாலிடெக்னிக்கும், சந்தோஷ் ஐ.டி.ஐ., குணா 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

வெவ்வேறு இடங்களில் படித்தாலும் 3 பேரும் ஒன்றாகவே வெளியே சுற்றுவது வழக்கம். நடந்து முடிந்த தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கவின்குமார் வருத்தத்தில் இருந்தார். தனது நண்பருக்காக 3 பேரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர்.

நேற்று இரவு மதுரையில் இருந்து இண்டர் சிட்டி ரெயிலில் திண்டுக்கல் வந்தனர். அதன்பிறகு எங்கு செல்வது என தெரியாமல் ரெயில் நிலையத்திலேயே தவித்தனர்.

ரெயில்வே போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மாணவர்கள் நடந்த விபரத்தை கூறினர். இதனையடுத்து அவர்களது பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

தென்காசி அருகில் உள்ள செங்கோட்டையை சேர்ந்த ஒலி மகன் முகமதுஅபீன் (12). இவன் தஞ்சாவூர் வடகரையில் உள்ள பள்ளியில் தங்கி உருது படித்து வந்தான். நேற்று பள்ளியை விட்டு வெளியேறி தனது ஊருக்கு செல்வதற்காக நாகப்பட்டிணத்தில் இருந்து ரெயில் மூலம் வந்தார். திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்ததும் இறங்கி எங்கே செல்வது என தெரியாமல் நின்று கொண்டிருந்தான். ரெயில்வே போலீசார் அவனை விசாரித்து தென்காசியில் உள்ள அவனது அம்மாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

Tags:    

Similar News