செய்திகள்

திருச்செங்கோடு அருகே நள்ளிரவு தனியார் வங்கியில் தீ விபத்து

Published On 2019-01-01 05:10 GMT   |   Update On 2019-01-01 05:10 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நள்ளிரவு தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. #BankFire

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலையில் தனியார் வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் வங்கியில் திடீரென தீப்பிடித்து, கரும்புகை குபு, குபு வென வெளியே வந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனே வங்கியில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், வங்கியின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் உட்புறம் பிடித்த தீயை அணைக்க முடியவில்லை.

இதனால் வங்கி மேலாளர் சமீர் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் தீ மளமளவென பரவி வங்கியில் இருந்த கணினி, ஏ.சி., மேசை, நாற்காலி, தளவாடச் சாமான்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்தது. இப்பொருட்களின் சேதமதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று வங்கி தரப்பில் கூறப்படுகிறது.

தீ விபத்தில் வங்கியில் இருந்த சுமார் 20 லட்சம் பணம் தப்பியது. மேலும் அடமானத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகள், தனி லாக்கரில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பொருட்கள் பத்திரமாக இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தெரியவில்லை. இது குறித்து எலச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #BankFire

Tags:    

Similar News