செய்திகள்

2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய 850 காளைகள் தயார்

Published On 2018-12-31 11:53 IST   |   Update On 2018-12-31 11:53:00 IST
தமிழகத்தில் 2019-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் நடக்கிறது. #Jallikattu
கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக சில ஆண்டாக போட்டி நடத்தப்படாததால் வாடிவாசல் பகுதி களையிழந்து காணப்பட்டது.

இந்தநிலையில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்துக்கு பின்னர் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றியதால் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து தச்சங்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

ஆண்டுதோறும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில்தான் நடத்தப்படும். அதன்படி 2019-ம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் 2-ந்தேதி நடத்தப்படுகிறது. இதற்காக ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வாடிவாசலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிக்காக தச்சங்குறிச்சியில் கேலரி அமைக்கப்பட்டு வரும் காட்சி.

மேலும் முக்கிய பிரமுகர்களுக்கான விழா மேடை மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்புடன் அமர்ந்திருப்பதற்கான கேலரி, போட்டி நடத்தப்படும் திடலில் அமைக்க வேண்டிய அம்சங்கள் அனைத்தும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

முதல் போட்டியில் தங்கள் காளை வெற்றி வாகை சூடவேண்டும் என்பதற்காக காளை மாடுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை காளையின் உரிமையாளர்கள் அளித்து வருகின்றனர். அதே போல் மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். போட்டிக்கான அனுமதி டோக்கன் கடந்த 2 நாட்களாக கொடுக்கப்பட்டு வருகிறது. போட்டியில் கலந்து கொள்ள இதுவரை 850 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதனால் தச்சங்குறிச்சி கிராமமே களை கட்டியுள்ளது. #Jallikattu


Tags:    

Similar News