செய்திகள்

என் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்- அமைச்சர் சீனிவாசன் மீது தா.பாண்டியன் குற்றச்சாட்டு

Published On 2018-12-30 17:03 GMT   |   Update On 2018-12-30 17:03 GMT
என் விவசாய நிலத்தை அபகரிக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முயற்சி செய்கிறார் என்று தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். #thapandian #ministerSrinivasan

ஈரோடு:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 3 நாட்களாக நடந்தது. மாநாட்டின் இறுதி நாளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.

மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு தா.பாண்டியன் ஈரோடு மூலக்கரையில் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.

அப்போது தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்று அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

கோரிக்கையை நிறைவேற்றாமல் அவர்களை ஒடுக்க நினைத்து அவர்கள் மீது வழக்கு போடுவது, கைது செய்வது என்று நடவடிக்கையை எடுப்பதன் மூலம் விவசாயிகளை ஒடுக்க முடியாது. அடக்க முடியாது. ஆகவே உடனடியாக அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

நானும் ஒரு விவசாயி என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் எனக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

அந்த நிலத்தை அபகரிக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முயற்சி செய்து வருகிறார். அவரது மருமகனுக்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களையும் அவர் பட்டா போட்டு கொடுக்கட்டும். அத்து மீறி என் சொந்த நிலத்தில் நுழைந்தால் சும்மா இருக்க மாட்டோம். காவல் துறையையும் சந்திப்போம். அமைச்சரையையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.

மேலும் தனியார் நிலத்தை பங்கு போடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது போலீசார் வழக்குபதிவு செய்ய வேண்டும்.

ஜெயலலிதாவை “மெதுவாக கொல்லும் ஸ்லோ பாய்சன் கொடுத்து” கொன்று விட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறி உள்ளார். இதை அவர் தெளிவாக சொல்ல வேண்டும். ஸ்லோபாய்சன் கொடுத்தது யார்? கொலையாளி யார்? யார்-யார் உடந்தை? என்பதை அவர் சொல்ல வேண்டும். அவரிடம் ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்த வேண்டும். அப்படி அவரிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியாகும் என நினைக்கிறேன்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார். #thapandian #ministerSrinivasan

Tags:    

Similar News