செய்திகள்

முக ஸ்டாலின் எடுத்த முடிவுக்கு ஆதரவு- ஈஸ்வரன்

Published On 2018-12-24 06:45 GMT   |   Update On 2018-12-24 06:45 GMT
ராகுல் பிரதமராக முக ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு இருக்கிறார். நாங்கள் கூட்டணி கட்சி என்ற வகையில் திமுக எடுத்த முடிவிற்கு ஆதரவு அளிப்பதாக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Eswaran #MKstalin #Rahulgandhi
அந்தியூர்:

அந்தியூரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரண்டு மாதங்களுக்கு முன்னர் காவிரியிலும் பவானியிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் தற்போதுவரை கொங்கு மண்டலம் முழுவதும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை.

தமிழக அரசு குடிமராமத்து பணிகள் மூலம் நிலத்தடி நீர் மேம்பட்டு இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு அல்லாமல் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்று கொண்டுதான் இருக்கிறது. குடி தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சனை வராத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கு எதிரானது மத்திய அரசு என விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கிறது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் விசாரணையின்றி கைது செய்யலாம் என சட்ட திருத்தம் கொண்டு வந்திருப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

இந்த இரண்டு காரணங்களால் தான் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி தோற்றதற்கு காரணம், இதனை அதன் தலைவர்களும் தற்போது உணர்ந்திருக்கின்றனர்.

விவசாயிகளை வாழ வைக்கின்ற வகையில் எந்த ஒரு முயற்சியும் மத்திய அரசு எடுக்காதது வேதனையளிக்கிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையிலும் எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு அறிவிக்காமல் இருக்கிறது.

மேகதாது அணை அதேபோல் கேரளாவில் புதிய அணை கட்ட ஆய்வு நடத்துவதற்கு அனுமதி அளித்து அதன் மூலம் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிரான அரசாகவே செயல்படுகிறது.

எனவே விவசாயிகள் வாழ வைக்கின்ற வகையிலும் தமிழகம் பயன்பெறும் வகையிலும் மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மிக குறைவான வாக்குகளை பெறும்.

ராகுல் பிரதமராக ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு இருக்கிறார். நாங்கள் கூட்டணி கட்சி என்ற வகையில் திமுக எடுத்த முடிவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Eswaran #MKstalin #Rahulgandhi
Tags:    

Similar News