செய்திகள்

வேப்பூரில் விபத்து- டிரைவர் பலி

Published On 2018-12-22 11:48 IST   |   Update On 2018-12-22 11:48:00 IST
கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று அதிகாலை லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேப்பூர்:

சென்னையில் இருந்து 25 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு நெல்லை நோக்கி புறப்பட்டது.

இந்த பஸ்சை நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வன்னிகோநந்தல் பகுதியை சேர்ந்த மூர்த்தி(வயது 40) என்பவர் ஓட்டிவந்தார்.

அதே பகுதியை சேர்ந்த செந்தமிழ்செல்வன்(25) என்பவர் அந்த பஸ்சில் மாற்று டிரைவராக இருந்தார்.

இந்தநிலையில் அந்த பஸ் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் பஸ்சின் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை ஆம்னி பஸ்டிரைவர் முந்திசெல்ல முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது.

இந்த விபத்தில் பஸ்சின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த செந்தமிழ்செல்வன் தூக்கி வீசப்பட்டார். அவர் ஆம்னி பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கினார். இதில் அவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான செந்தமிழ்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News