செய்திகள்

கொடைக்கானலில் 2 நாட்களாக கொட்டி தீர்க்கும் கனமழை

Published On 2018-12-05 04:51 GMT   |   Update On 2018-12-05 04:51 GMT
கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக இடை விடாமல் பெய்து வரும் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. #Rain

கொடைக்கானல்:

கஜா புயலால் பெரிதும் பாதிப்பை சந்தித்த கொடைக்கானலில் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கடும் பனி மூட்டத்துடன் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நேற்று காலை தொடங்கிய மழை இரவு வரை இடை விடாமல் கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ் வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர்.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்லும் நிலை உள்ளது. பனிப் பொழிவு அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.


தொடர் மழையினால் அவர்களும் வெளியே வர முடியாமல் விடுதிக்குள்ளே முடங்கினர். இதனால் அனைத்து சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஓட்டல், உணவகங்கள் ஆகியவையும் களை இழந்து காணப்பட்டன.

வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானல் நோக்கி 50 பயணிகளுடன் ஒரு தனியார் பஸ் சென்று கொண்டு இருந்தது. நேற்று மாலை மயிலாடும்பாறை அருகே வந்த போது கடும் பனி மூட்டம் காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். பள்ளத்தில் இறங்கிய பஸ் ஒரு பாறை மீது மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருந்தபோதும் பஸ்சுக்குள்ளேயே பயணிகள் நிலை தடுமாறி விழுந்ததால் சிலருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பயணிகளை பத்திரமாக மீட்டதுடன் பஸ்சையும் அங்கிருந்து மேலே கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Rain

Tags:    

Similar News