செய்திகள்

எழும்பூரில் பராமரிப்பு பணி- தென்மாவட்ட ரெயில்கள் 2 மணி நேரம் தாமதம்

Published On 2018-12-01 04:54 GMT   |   Update On 2018-12-01 04:54 GMT
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். #EgmoreRailwayStation #TrainsDelayed
சென்னை:

சென்னை எழும்பூர் யார்டு பகுதியில் தண்டவாள பாயிண்ட் பராமரிப்பு பணி நள்ளிரவு முதல் நடைபெற்றது. இந்த பணியை அதிகாலைக்குள் முடிப்பதற்கு தொழில் நுட்ப பணியாளர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் அந்த பணி நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டது. பணியை முடிக்க நேரம் நீடித்ததால் எழும்பூர் நிலையத்திற்கு வரும் ரெயில்கள் உள்ளே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

சேலம் எக்ஸ்பிரஸ், பாண்டியன், மலைக்கோட்டை ஆகிய ரெயில்கள் வந்து சேர்ந்தன. அதன் பின்னர் வந்த தென்மாவட்ட ரெயில்கள் வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. தண்டவாளத்தை பிரித்து ஒவ்வொரு பிளாட்பாரத்திற்கும் ரெயில்களை அனுப்பக் கூடிய ‘பாயிண்ட்’ சரி செய்யும் பணி முடிப்பதற்கு நேரம் அதிகமானதால் ரெயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கூடுவாஞ்சேரியிலும், நெல்லை எக்ஸ்பிரஸ் காட்டாங்கொளத்தூரிலும், ராமேஸ்வரம், பொதிகை, முத்துநகர், அனந்தபுரி ஆகிய ரெயில்கள் வழியிலும் நிறுத்தப்பட்டன.

ரெயில்கள் வழியில் நிறுத்தப்பட்ட பின்னர் எப்போது புறப்படும், எதற்காக நிறுத்தப்பட்டது என்ற எந்த தகவலையும் நிர்வாகம் பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து விட்டு மின்சார ரெயிலில் ஏறி தாம்பரம், எழும்பூருக்கு சென்றனர்.

நெல்லை எக்ஸ்பிரசில் 150 மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்தனர். அவர்களை அந்த ரெயிலில் வந்த பயணிகள் பத்திரமாக கீழே இறக்கி மின்சார ரெயிலில் ஏற்றி விட்டனர். தாம்பரம் ரெயில் நிலையத்திலும் அவர்களை பாதுகாப்பாக இறக்கி விட்டனர்.

இதற்கிடையில் பராமரிப்பு பணி விரைவாக முடிக்கப்பட்டு ரெயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டன. ஆனாலும் வழக்கமான நேரத்தை விட 2 மணி நேரம் தாமதமாக ரெயில்கள் எழும்பூர் வந்து சேர்ந்தன. இதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். #EgmoreRailwayStation #TrainsDelayed
Tags:    

Similar News