செய்திகள்
தற்கொலை செய்த கார்த்திக் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதபோது எடுத்தப்படம்.

காரிமங்கலம் அருகே ஆசிரியர்கள் திட்டியதால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-11-30 16:51 IST   |   Update On 2018-11-30 16:51:00 IST
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே ஆசிரியர்கள் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள திக்க திம்மன அள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் கார்த்திக் (வயது15). இவர் காரிமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று அந்த பள்ளியில் கார்த்திக், சேதுமாதவன், இனியன் ஆகிய 3 பேரும் 2 பாடத்தில் மார்க் குறைவாக வாங்கியதால் ஆசிரியர்கள் அந்த 3 மாணவர்களை பிரம்பால் அடித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த கார்த்திக் வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் ஆசிரியர்கள் என்னை பிரம்பால் தாக்கியதால் எனக்கு வலிக்குது என்று கூறினார். இதற்கு பெற்றோர் ஆறுதல் கூறினார்.

இதனால் மனமுடைந்த கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்த மாணவன் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மாணவன் கார்த்திக் ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர் திட்டியதால் மாணவன் கார்த்திக் இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
Tags:    

Similar News