search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmapuri suicide"

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே ஆசிரியர்கள் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள திக்க திம்மன அள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் கார்த்திக் (வயது15). இவர் காரிமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று அந்த பள்ளியில் கார்த்திக், சேதுமாதவன், இனியன் ஆகிய 3 பேரும் 2 பாடத்தில் மார்க் குறைவாக வாங்கியதால் ஆசிரியர்கள் அந்த 3 மாணவர்களை பிரம்பால் அடித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த கார்த்திக் வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் ஆசிரியர்கள் என்னை பிரம்பால் தாக்கியதால் எனக்கு வலிக்குது என்று கூறினார். இதற்கு பெற்றோர் ஆறுதல் கூறினார்.

    இதனால் மனமுடைந்த கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்த மாணவன் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மாணவன் கார்த்திக் ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆசிரியர் திட்டியதால் மாணவன் கார்த்திக் இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
    தருமபுரியில் மின்வாரிய அதிகாரியின் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த சித்தேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவர் மின்வாரிய துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    இவருடைய மகள் சிபிதா (வயது 15). இவர் தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் பாத்ரூமுக்கு சென்றார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வீட்டில் இருந்த உறவினர்கள் பாத்ரூமின் கதவை தட்டினர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. உடனே சந்தேகம் அடைந்த அவர்கள் பாத்ரூமின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிபிதா பாத்ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனே உறவினர்கள் சிபிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் உடனே அங்கு விரைந்து சென்று சிபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிபிதாவை பெற்றோர்கள் திட்டியதால் தூக்கு போட்டு தற்கொலை கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி அருகே தனது சத்தியத்தை மீறி தந்தை மீண்டும் குடித்ததால் மனம் உடைந்த மகள் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மாரவாடி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் முருகன், லாரி டிரைவர். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ரஞ்சினி (வயது 16), கனிமொழி (13) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

    அங்குள்ள தனியார் பள்ளியில் ரஞ்சினி 9-ம் வகுப்பும், கனிமொழி 7-ம் வகுப்பும் படித்தனர். முருகனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் லாரி ஓட்டி சம்பாதிக்கும் பணத்தை மதுப்பழக்கத்துக்கே முருகன் செலவழித்து வந்தார். இதை கண்டு வேதனை அடைந்த கனிமொழி தந்தையிடம் குடிக்க கூடாது என்று சத்தியம் வாங்கினார். இந்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு கடந்த 3 மாதமாக முருகன் குடிக்காமல் இருந்தார்.

    நேற்று முன்தினம் லாரிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த அவர் இன்று ஒரு நாள் மட்டும் குடித்துக்கொள்வதாகவும், இனிமேல் குடிக்க மாட்டேன் என்றும் மகள் கனிமொழியிடம் சத்தியம் செய்தார். இதனால் தந்தை குடிக்க அவர் அனுமதி அளித்தார். தொடர்ந்து குடித்தால் தான் தற்கொலை செய்துவிடுவதாக கனிமொழி கூறினார். என்றாலும் கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கி வந்து அதில் பாதியை முருகன் குடித்துவிட்டார். மீதி பாட்டிலில் இருந்த மதுவை குடிக்க கூடாது என்று தந்தையிடம் கூறிவிட்டு நேற்று கனிமொழி பள்ளிக்கு சென்றுவிட்டார்.

    மாலையில் வந்து பார்த்தபோது அந்த மதுபாட்டில் காலியாக இருந்தது. இதைப்பார்த்து தாயார் பூங்கொடியிடம் கனிமொழி கேட்டார். உனது அப்பா உனக்கு கொடுத்த சத்தியத்தை மீறி குடித்துவிட்டு தூங்கி கொண்டு இருக்கிறார் என்று கூறினார். இதனால் மனம் உடைந்த கனிமொழி வீட்டு அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு துப்பட்டாவால் தூக்கில் தொங்கினார். கதவை உடைத்து அவரை பெற்றோர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தனது சத்தியத்தை மீறி தந்தை மீண்டும் குடித்ததால் மனம் உடைந்த மகள் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த மாது என்பவர் கூறியதாவது:-

    மாணவி கனிமொழி எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். பள்ளியிலும் நன்றாக படிப்பார். சம்பாதிக்கும் பணத்தை குடிப்பழக்கத்துக்கு தந்தை செலவழிப்பதை கண்டு மனம் உடைந்த கனிமொழி இதுகுறித்து சக மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவிப்பார். மேலும் மதுக்கடைகளால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதை குறிப்பிட்டு வேதனைப்படுவார்.

    அதுபோல தந்தையின் குடிப்பழக்கத்தால் தனது குடும்பமும் சீரழிய கூடாது என்பதற்காக தனது தந்தையிடம் சத்தியம் வாங்கி இருக்கிறார். சத்தியத்தை அவர் மீறியதால் தனது உயிரை தியாகம் செய்து தனது தந்தை இனிமேலாவது குடிப்பழக்கத்தை விட வேண்டும் என்பதை உணர்த்தி இருக்கிறார். இனிமேலாவது தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படி இல்லையென்றாலும் மதுக்கடைகளின் எண்ணிக்கையையாவது படிப்படியாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×