செய்திகள்
ஆம்னிபஸ் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம். (உள்படம்-மதன்)

மேலூர் அருகே 4 வழிச்சாலையில் விபத்து: டி.வி. தொடர் நடிகர் பலி

Published On 2018-11-30 07:01 GMT   |   Update On 2018-11-30 07:01 GMT
4 வழிச்சாலையில் ஆம்னி பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டி.வி. தொடர் நடிகர் உடல் நசுங்கி பலியானார். 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர். #MelurAccident
மேலூர்:

சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டினார். பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இன்று காலை மதுரை மாவட்டம் மேலுர் 4 வழிச்சாலையில் ஆம்னி பஸ் வந்து கொண்டு இருந்தது. வஞ்சிநகர் என்ற பகுதியில் வந்த போது ஆம்னிபஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோர வயலுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதனால் பஸ்சில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மேலுர் சுங்கச்சாவடி மீட்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் குழுவினர் விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பெண்கள் உள்பட 20 பேரை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செல்லும் வழியிலேயே சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சாமிகண்ணு மகன் மதன் (வயது 28) என்பவர் பரிதாபமாக இறந்தார். இவர் ஐ.டி. ஊழியர் ஆவார். மேலும் டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.

படுகாயமடைந்த மற்ற 19 பேர் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆபத்தான நிலையில் இருந்த சிலர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)சங்கீதா, தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News