செய்திகள்
மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

பிரபல நிறுவனங்களின் பெயரில் கலப்பட நெய் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல்

Published On 2018-11-23 06:37 GMT   |   Update On 2018-11-23 06:37 GMT
கோவையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கலப்பட நெய் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைத்த அதிகாரிகள் 500 லிட்டர் போலி கலப்பட நெய்யை பறிமுதல் செய்தனர். #Ghee #AdulteratedGhee
கோவை:

கோவை சாய்பாபா காலனியில் உள்ள கருப்பண்ணன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து போலியாக பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி கலப்பட நெய் தயாரிப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர். விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பிரபலமான 3 நெய் தயாரிப்பு நிறுவனங்களின் லேபிள்களை பயன்படுத்தி கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு இருந்த 500 லிட்டர் போலி கலப்பட நெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கலப்பட நெய் தயாரிப்பு தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த கலப்பட நெய் தயாரிப்பு தொழிற்சாலையை பொன்ராஜ் என்பவர் நடத்தி வந்ததும் இங்கு பிரகாஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வேலை செய்ததும் தெரியவந்தது.



இங்கு பாமாலின் ஆயிலுடன் வனஷ்பதி மற்றும் எசன்ஸ் சேர்த்து கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. எனவே இங்கு பறிமுதல் செய்யப்பட்ட போலி கலப்பட நெய்யை அதிகாரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

இது குறித்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

சாய்பாபா காலனியில் செயல்பட்டு வந்த கலப்பட நெய் தயாரிக்கும் நிறுவனத்தில் 500 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இங்கு 3 பிரபல நெய் தயாரிப்பு நிறுவனங்களின் லேபிள்களை பயன்படுத்தியும், போலி முகவரிகளை பயன்படுத்தியும் கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். எனவே இந்த நிறுவனத்துக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்த உடன் போலி நிறுவனத்தை நடத்தி வந்தவர் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #Ghee #AdulteratedGhee

Tags:    

Similar News