செய்திகள்

பரமக்குடியில் வீட்டின் மேற்கூரை விழுந்து மூதாட்டி உடல் நசுங்கி பலி

Published On 2018-11-22 16:32 IST   |   Update On 2018-11-22 16:32:00 IST
பரமக்குடியில் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி இறந்தார். மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார்.
பரமக்குடி:

கஜா புயல் மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை பெய்தது.

பரமக்குடி எமனேசுவரம் ஈஸ்வரன் கோவில் 5-வது தெருவை சேர்ந்தவர் இந்துமதி (வயது 83). இவர் தனது சகோதரி சாந்தா மணியுடன் (63) வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக சகோதரிகள் இருவரும் அரசு வழங்கும் உதவி தொகை மூலம் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

மழை காரணமாக இவர்களது வீட்டின் சுவர் ஈரப்பதமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த இருவரும் உடல் நசுங்கினர். மேற்கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை கடும் சிரமத்துக்கிடையே மீட்டனர்.

படுகாயம் அடைந்த இந்துமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சாந்தா மணியை மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Tags:    

Similar News