செய்திகள்
விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்ற மின்வாரிய ஊழியரை அமைச்சர் பார்வையிட்டு ஆறுதல் கூறிய காட்சி.

டெல்டா மாவட்டங்களில் ஓரிரு நாட்களில் முழுமையான மின் விநியோகம் வழங்கப்படும்- அமைச்சர் தங்கமணி

Published On 2018-11-21 06:46 GMT   |   Update On 2018-11-21 06:46 GMT
கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் ஓரிரு நாட்களில் முழுமையான மினி விநியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #MinisterThangamani
திருச்சி:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள் முருகேசன், மோகன் ஆகியோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

அவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று இரவு திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து அவர்கள் இருவரையும் பார்த்தார்.

டாக்டர்களிடம் இருவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அவர்களது இருவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் கீழே விழுந்துள்ளன. 20 மின் கோபுரங்கள் வெடித்து சிதறி உள்ளன. 219 துணை மின் நிலையங்கள் சேதம் அடைந்தன. இவற்றை சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் 21 ஆயிரத்து 461 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இன்னும் 55 துணை மின்நிலையங்கள் சீரமைக்கப்பட வேண்டியது உள்ளது. மின்கம்பங்கள் நடும் பணிகளும் இன்னொரு புறம் தீவிரமாக நடந்து வருகிறது.

பொதுவாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பொறுத்தவரை நகர பகுதிகளில் மின் இணைப்பு வழங்கும் பணியானது இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக வழங்கப்பட்டு விடும். தஞ்சாவூர் நகர பகுதியில் 98 சதவீதமும், திருவாரூரில் 60 சதவீதமும், நாகை நகர பகுதியில் 95 சதவீதமும் மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கிராமப்பகுதிகளை பொறுத்தவரை சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைய இன்னும் ஒரு வார காலம் ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது தனியார் ஒருவர் ஜெனரேட்டர் போட்டதால் தான் இந்த சம்பவம் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. அது உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterThangamani
Tags:    

Similar News