செய்திகள்
கொள்ளை சம்பவம் நடந்த வீட்டையும், பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும் படத்தில் காணலாம்.

அறந்தாங்கி அருகே திருமணத்திற்காக வைத்திருந்த 96 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2018-11-14 04:24 GMT   |   Update On 2018-11-14 04:24 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருமணத்திற்காக வைத்திருந்த 96 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டினம் தாஜ்மகால் தெருவை சேர்ந்தவர் நூர்தீன் (வயது 48). மைக்செட் கடை வைத்துள்ளார்.

மாவட்டம் முழுவதும் நடைபெறும் மாநாடு, பொதுக்கூட்டம், திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்திற்கும் மைக்செட் அமைத்து பெயர் பெற்றவர். இந்த நிலையில் நூர்தீன் தனது மனைவியின் தங்கை மகள் திருமணத்திற்காக 96 பவுன் நகையை வாங்கி வைத்திருந்தார்.

இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் சிறிது சிறிதாக இந்த நகைகளை சேர்த்திருந்தார். நேற்று மனைவிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவரை அழைத்துக்கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை சென்றிருந்தார்.

இன்று அதிகாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது அவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த நூர்தீன் வீட்டிற்குள் சென்றார். அங்கு வீடே அலங்கோலமாக காட்சி அளித்தது. அனைத்து பொருட்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

மேலும் தனி அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 96 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. நகை, பணம் திருட்டு போனதால் நூர்தீன் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டு முன்பு திரண்டனர்.

பின்னர் இதுகுறித்து நூர்தீன் கோட்டைப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் நகை இருப்பதை முன்கூட்டியே அறிந்தவர்கள்தான், இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும், அவர்கள் உறவினர்களா? அல்லது நூர்தீன் மைக் செட் கடையில் வேலை பார்க்கும் நபர்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News