செய்திகள்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைபடகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி.

நெல்லை, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Published On 2018-11-13 05:34 GMT   |   Update On 2018-11-13 05:34 GMT
கஜா புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன்பிடிக்க விசைப்படகுகளில் கடலுக்கு செல்லவில்லை. #GajaCyclone #GajaStorm #Fishermen
நெல்லை:

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் தற்போது திசைமாறி நாகப்பட்டினம் பாம்பன் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நெல்லை- தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன்பிடிக்க விசைப்படகுகளில் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகு மீனவர்கள் வழக்கம் போல் நேற்று நள்ளிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்று இன்று காலை கரை திரும்பி விட்டனர்.

தூத்துக்குடியில் மட்டும் சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

‘கஜா’ புயல் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

‘கஜா’ புயல் காரணமாக வடதமிழகம் மற்றும் தென் மாவட்டங்களில் வரும் 14 -ந்தேதி கனமழை பெய்யும். 15-ந்தேதி வடதமிழகத்தில் மிக மிக கனத்த மழையும் தென்தமிழகத்தில் மிக கனமழை அல்லது கனமழை பெய்யும்.

சுழல் காற்று மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில், அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று 13-ந்தேதி காலை முதல் வீசக்கூடும்.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை கடல் சீற்றத்துடன் காணப்படும்.

இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த பருவமழை இன்று நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பெய்யத் தொடங்கி உள்ளது. தென்காசியில் அதிகபட்சமாக 6.4 மில்லி மீட்டர் மழையும், ஆய்க்குடியில் 4.20 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது.

பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணை நீர் மட்டம் தொடர்ந்து அப்படியே நீடிக்கிறது. அணைகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே வருகிறது.  #GajaCyclone #GajaStorm #Fishermen


Tags:    

Similar News