செய்திகள்

சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்வதை வரவேற்கிறோம்- ராஜன் செல்லப்பா

Published On 2018-11-09 11:11 GMT   |   Update On 2018-11-09 11:11 GMT
‘சர்கார்’ சினிமாவில் சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்யப்படுவதை வரவேற்கிறோம் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். #Sarkar #ADMK #RajanChellappa
மதுரை:

மதுரையில் ‘சர்கார்’ சினிமா திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க. வினர் நேற்று மதியம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மீதான ‘சர்கார்’ காட்சிகள் அனைத்தையும் நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அந்தக்காட்சிகள் நீக்கம் செய்த பின்னர் சினிமாவில் திரையிட வேண்டும் என்றும் தியேட்டர் மானேஜரை சந்தித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வற்புறுத்தினார். இதையடுத்து நேற்று மதிய காட்சியும் ரத்து செய்யப்பட்டது.

‘சர்கார்’ படத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

இன்று மதியம் முதல் திரையிடப்படும் ‘சர்கார்’ படத்தில் சர்ச்சை காட்சிகள் இருக்காது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

மறைந்த தலைவர் குறித்தும், அரசின் நலத் திட்டங்கள் குறித்தும் சினிமாவில் விமர்சனங்கள் செய்வது கண்டனத்துக்குரியது.

தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அ.தி.மு.க. அரசு செய்துள்ள சாதனை திட்டங்களை வேண்டுமென்றே உள் நோக்கத்தில் கொச்சைப்படுத்த சர்கார் திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தான் அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்தோம். இப்போது சர்கார் படக்குழு சர்ச்சை காட்சிகளை நீக்க முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

இது போன்று இனி மேலும் நடக்காதவாறு திரையுலகினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மதுரை அண்ணாநகர் பகுதியில் ரூ.22 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அண்ணாநகர் முருகன், ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Sarkar #ADMK #RajanChellappa
Tags:    

Similar News