செய்திகள்

பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போடுவதா?- பாலகிருஷ்ணன் கண்டனம்

Published On 2018-11-07 07:58 GMT   |   Update On 2018-11-07 07:58 GMT
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எவ்வளவோ கிடப்பில் இருக்கும் போது பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போட்டதற்கு பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு போடுவது மிகவும் கண்டனத்துக்குரியது.

காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்றாமல் கிடப்பில் போட்ட போது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.

எனவே பண்டிகை காலமான தீபாவளிக்கு மகிழ்ச்சி பொங்க குடும்பத்துடன், குழந்தைகளுடன் பட்டாசு வெடித்தவர்களை குற்றவாளி போல் தேடி பிடித்து வழக்கு பதிவு செய்வதும், போலீஸ் வாகனத்தில் பிடித்துச் சென்று அவமானப்படுத்துவதையும் மக்கள் விரும்புவதில்லை.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் பிரச்சனைகள் அதிகம் உள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல் பொது மக்களிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்வதும், பொது மக்களை போலீஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து காலை முதல் மாலை வரை உட்கார வைப்பதையும் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது அநியாயம்.

எனவே பட்டாசு போடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது. போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News