செய்திகள்
பொதுக்கூட்டத்தில் தருமபுரி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசிய காட்சி.

தோல்வி பயத்தால் அதிமுக அரசு 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்தாது- அன்புமணி

Published On 2018-11-01 10:29 GMT   |   Update On 2018-11-01 10:29 GMT
தோல்வி பயத்தால் அ.தி.மு.க. அரசு 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்தாது என்று கம்பைநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார். #PMK #AnbumaniRamadoss #ADMK
கம்பைநல்லூர்:

பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்கம் சார்பில், காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி, 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் கம்பைநல்லூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த விளக்கப் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம் அதிகம் உள்ளது. தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் உள்ளிட்ட காலியாக உள்ள 2 தொகுதிகளிலும், அ.தி.மு.க. அரசு இடைத்தேர்தலை நடத்தாது.

அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது. மாநில அரசு மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால், தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வராது.

காவிரி ஆற்றில் நிகழாண்டில் சுமார் 173 டி.எம்.சி. தண்ணீர் வீணாகி கடலில் கலந்துள்ளது. இந்த வீணாகும் நீரில், சுமார் 3 டி.எம்.சி. தண்ணீரை வழங்கினால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் நிரப்ப முடியும்.

தருமபுரி மாவட்டத்தில் தற்போது, நிலத்தடி நீர் மட்டம் 1,500 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. காவிரி உபரி நீரை நீர்நிலைகளில் நிரப்பினால் இந்த மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 100 அடியில் இருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு ரூ.400 கோடி செலவாகும்.

எனவே, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு காவிரி உபிரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த திட்டத்தை வலியுறுத்தி பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில், 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் பணிகள் நடைபெறுகிறது. இதில், 7.25 லட்சம் பேரிடம் தற்போது கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள கையெழுத்துகள் பொதுமக்களிடமிருந்து பெற்று, கோரிக்கை மனுக்களை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உள்ளோம்.

தமிழகத்தில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால், தருமபுரி மாவட்டத்துக்கு என்று ரூ. 1000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, இந்த மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச்செயலர் வெங்கடேஸ்வரன், உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, கிழக்கு மாவட்ட செயலர் இமயவர்மன், உழவர் பேரியக்க மாவட்ட செயலர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #PMK #AnbumaniRamadoss #ADMK
Tags:    

Similar News