செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது பஸ் மோதல்- பெண் பலி

Published On 2018-10-12 06:50 GMT   |   Update On 2018-10-12 06:50 GMT
கும்மிடிப்பூண்டி அருகே இன்று காலை லாரி மீது பஸ் மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி:

தமிழக அரசு பஸ் ஒன்று இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆந்திர மாநிலம் சூளூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தது.

இந்த பஸ் காலை 5.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியை அடுத்த பஞ்சட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் பஸ்சின் இடது பக்கம் முழுவதும் சிதைந்தது. பயணிகள் ‘அய்யோ அம்மா...’ என்று அலறினார்கள். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதியில் அமர்ந்திருந்த குமாரி லட்சுமி (51) என்ற பெண் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார். இவர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியை சேர்ந்தவர்.

ஆந்திராவில் இருந்து குடும்பத்துடன் ரெயிலில் கும்மிடிப்பூண்டு வந்த இவர், கோயம்பேடு வருவதற்காக இந்த பஸ்சில் ஏறினார். ஆனால் சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கி பலியானார். இந்த விபத்தில் குமாரி லட்சுமியுடன் பயணம் செய்த அவருடைய கணவர் நாகராஜ் ராவ் (54), உறவினர் எலிசா (39) ஆகியோரும் காயம் அடைந்தனர். இது தவிர அதே பஸ்சில் பயணம் செய்த நாகமணி (53) படுகாயம் அடைந் தனர். இவர்கள் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள்.

40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மயக்க நிலையில் உள்ளார். படுகாயம் அடைந்த 6 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த பஸ்சை சிட்டிபாபு (வயது 54) என்பவர் ஓட்டி வந்தார். இவர் நசரத் பேட்டையை சேர்ந்தவர். கண்டக்டர் தரணி, திருவள்ளூரை அடுத்த சோம்பூரை சேர்ந்தவர்.

விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையில் கவரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News