செய்திகள்
கோப்புப்படம்

மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

Published On 2018-10-06 11:46 GMT   |   Update On 2018-10-06 11:46 GMT
இன்னும் 4 அல்லது 5 மாதத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தஞ்சையில் புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்தார். #PuducherryCM #Narayanasamy #BJP #Kiranbedi
தஞ்சாவூர்:

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் கழிவுநீர் ஓடையில் நான் இறங்கி சுத்தம் செய்த செய்தி வெளியானது. நான் கழிவுநீர் ஓடையில் இறங்கி சுத்தம் செய்தது பிரதமர் பாராட்டை பெறுவதற்காக அல்ல. 2 மாதங்களுக்கு முன்பே அந்த இடத்தை பார்வையிட்டேன். மணல், குப்பை மற்றும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் தான் நாம் களத்தில் இறங்கினால் எனக்கு பின்னால் உள்ள அதிகாரிகள் வேலை செய்வார்கள் என்ற கோணத்தில் சுத்தம் செய்தேன்.

நான் ½ மணி நேரம் தான் சுத்தம் செய்தேன். ஆனால் பொதுமக்களும், பொதுப் பணித்துறை அதிகாரிகளும் சுமார் 2 மணி நேரம் சுத்தம் செய்தனர். இது மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமை ஆகும். சில பேர் ஏற்கனவே குப்பைகளை கொட்டி விட்டு பின்பு அந்த இடத்தை சுத்தம் செய்கிறார்கள்.

டெல்லியில் நிலம், காவல் துறை, சட்டம் ஒழுங்கு ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் நிலம், நிர்வாகம், சட்டம் ஒழுங்கு ஆகியவை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆனால் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் அரசுக்கு ஒத்துழைக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுகிறார்.

இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்துள்ளோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

பல்வேறு திட்டங்கள் குறித்து கவர்னருக்கு கோப்புகள் அனுப்பியும் கையெழுத்து இடாமல் திருப்பி அனுப்பி விடுகிறார். இதுகுறித்து பிரதமரிடம் முறையிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.

இன்னும் 4 அல்லது 5 மாதத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது புதுச்சேரி மாநிலத்திலும் மாற்றம் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார். #PuducherryCM #Narayanasamy #BJP #Kiranbedi
Tags:    

Similar News