செய்திகள்
ஏடிஎஸ்பி. சாம் பிரியகுமார் (பழைய படம்). உடல் எடை அதிகரித்து வீட்டில் படுக்கையில் இருக்கும் சாம் பிரியகுமார்.

உயிருக்கு போராடும் முன்னாள் போலீஸ் அதிகாரி- மனைவி மீது சகோதரி புகார்

Published On 2018-09-15 09:04 GMT   |   Update On 2018-09-15 09:04 GMT
மூளை புற்றுநோயால் உயிருக்கு போராடும் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு அவரது மனைவி முறையான சிகிச்சை அளிக்கவில்லை என அவரது சகோதரி புகார் அளித்துள்ளார்.
போரூர்:

சென்னையை அடுத்த ஆவடி பருத்திபட்டில் வசித்து வருபவர் சாம் பிரிய குமார் (59). போலீஸ் துறையில் ஏ.டி.எஸ்.பி.யாக பதவி வகித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஓய்வுபெற்றார். பணியில் இருந்தபோது இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அவருக்கு மூளை புற்றுநோய் இருப்பது மருத்துவரால் கண்டறியப்பட்டது. பல்வேறு கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நோயின் தீவிர தன்மை முற்றிலும் பரவியது. அவரது மனைவி ஜெயா மருத்துவ ரீதியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.

இந்தநிலையில் சாம் பிரியகுமாரின் தங்கை ஷீலா எபிநேசர் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறிஇருப்பதாவது:-

நான் அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியில் வசித்து வருகிறேன். எனது சகோதரர் சாம் பிரியகுமார் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காமல் வீட்டிலேயே வைத்துள்ளனர். அவரை மீட்டு சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து உதவி கமி‌ஷனர் சிவகுமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். திருமங்கலம் போலீசார் ஏ.டி.எஸ்.பி. வீட்டிற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் ஏ.டி.எஸ்.பி. குடும்பத்திற்கும் புகார் கொடுத்துள்ள சகோதரி குடும்பத்துக்கும் 30 வருடமாக பேச்சுவார்த்தை கிடையாது என தெரியவந்தது. குடும்ப காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பிரச்சனையை இப்போது ஏற்படுத்தி வருவதாக ஏ.டி.எஸ்.பி. மனைவி ஜெயா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும் போது, என் கணவரை காப்பாற்ற ஒரு மனைவிக்கு இல்லாத அக்கறையா? 30 வருடமாக பேசாத இவருக்கு திடீரென என் கணவர் மீது பாசம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. என் கணவர் உயிரை காப்பாற்ற போராடி வருகிறேன். மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர். கடவுள் ஒருவரைத்தான் நம்பி இருக்கிறேன். அவர் படுத்த படுக்கையாகிவிட்டார். அவரால் நடக்க முடியாது. எல்லா பணிவிடைகளையும் அருகில் இருந்து நான் செய்து வருகிறேன் என்றார்.
Tags:    

Similar News