செய்திகள்

தி.மு.க.வுக்கும் பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை - தமிழிசை

Published On 2018-09-10 08:16 GMT   |   Update On 2018-09-10 08:16 GMT
தி.மு.க.வுக்கும் பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை கூறினார். #TamilisaiSoundararajan
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி ஒரு முடிவை எடுத்துள்ளார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் நடவடிக்கை எடுப்பார். இதில் வியப்பு என்னவென்றால் காங்கிரசில் பலர் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

166-வது சட்டப்பிரிவின் கீழ் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் விடுதலை செய்யவில்லை.

மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது இந்த சட்ட விதிகளை வைத்து ஏன் விடுதலை செய்யவில்லை. இப்போதுதான் அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என்று கூறி வருகின்றனர்.

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பந்த் நடத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எண்ணெய் நிறுவனங்களின் தொலைநோக்கு பார்வைக்கான வழிமுறைகள் இல்லை. தொலைநோக்கு பார்வையில் பெட்ரோல் - டீசல் தேவைக்காக நிர்வாகத்தின் திட்டமிடுதல் இல்லை. தற்போது மத்திய அரசு கடன்களை அடைத்ததால் இன்று பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்துள்ளது.

மேலும் சர்வதேச அளவில் பண வீக்கம் ஒரு காரணம். பெட்ரோல் - டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர அனைத்து மாநிலங்ளும் ஏற்றுக்கொண்டு ஒத்துழைக்க வேண்டும். எங்களை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்தப்படும்.

தி.மு.க.வுக்கும் பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மரியாதை மற்றும் அரசியல் நாகரீகம் கருதி கலைஞர் விழாவில் கலந்து கொண்டோம்.

தற்போது நடந்த சி.பி.ஐ. சோதனை தகவலின் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறது. எந்த காலத்திலும் தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி பற்றி பேசவில்லை. பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் மறைமுக கூட்டணி உள்ளது என்று சொல்லி இருப்பது தவறு.

இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan
Tags:    

Similar News