பைக் டாக்சிகள் மீதான தடையை நீக்கியது கர்நாடக ஐகோர்ட்
- பைக் டாக்சியால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் குற்றம் சாட்டினர்.
- இதையடுத்து, கர்நாடக அரசு இந்த பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் டாக்சி நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன. இந்தத் தொழிலை நம்பி சுமார் 6 லட்சம் பேர் உள்ளனர். பெங்களூருவில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பைக் டாக்சிகள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வந்தன.
பைக் டாக்சியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய ஆட்டோ டிரைவர்கள் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்குமாறு கோரி தீவிர போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கர்நாடக அரசு இந்த பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ள பைக் டாக்ஸி சேவையை மீண்டும் அனுமதிக்கக் கோரி பைக் டாக்சி ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர்.
தடையை எதிர்த்து பைக் டாக்சி ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் வந்தபோது, கர்நாடகத்தில் பைக் டாக்சி இயங்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.