செய்திகள்

சூறாவளியுடன் மழை - முக்கொம்பு அணை தற்காலிக சீரமைப்பு பணிகள் பாதிப்பு

Published On 2018-08-28 13:15 GMT   |   Update On 2018-08-28 13:15 GMT
தண்ணீரின் வேகம் மற்றும் மழையால் திருச்சி முக்கொம்பு அணை சீரமைப்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி:

திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. உடைந்த பகுதி மட்டுமல்லாமல் அதோடு கூடுதலாக 220 மீட்டர் தூரம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

அணையில் தென்கரை பகுதியில் முதலாவது மதகில் இருந்து 5-வது மதகு வரை தற்போது மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மணல் மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் 1 லட்சம் மணல் மூட்டைகளை கொண்டு மதகுகளில் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் சீரமைப்பு பணியில் ஈடுபட்டி ருந்த தொழிலாளர்கள் அனைவரும் கரைக்கு திரும்பினர். தொடர்ந்து மழை தூறியபடி இருந்ததால் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் தங்களது உடைமைகளுடன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.


இன்று காலை முதல் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . அணையில் கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்காக நாட்டு படகு ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் ஆற்றின் நடுவே நடைபெற்று வரும் பணிகளுக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் மேலும் ஒரு படகும் கொண்டு வரப்பட உள்ளது.

இதனிடையே புதிய அணை கட்டுவதற்கான பணிகளில் நிபுணர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொள்ளிடம் அணைப்பகுதிக்கு வரக்கூடிய தண்ணீரை காவிரி ஆற்றில் திருப்பிவிடும் பணி மிதவை பொக்லைன் எந்திரம் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

முக்கொம்பு அணையில் உடைந்த பகுதியை பார்வையிட்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 நாட்களுக்குள் தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தண்ணீரின் வேகம் மற்றும் மழை ஆகியவற்றால் முக்கொம்பு அணையில் சேதமடைந்த மதகுகளை சீரமைக்கும் பணி இரு வாரங்களுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு 29,000 கனஅடி தண்ணீர் வந்தது. இதில் காவிரி ஆற்றில் 13,000 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 16,000 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு 26,000 கனஅடி தண்ணீர் வந்தது. அங்கிருந்து 24,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
Tags:    

Similar News