செய்திகள்

ஸ்டெர்லைட் போராட்ட வழக்கில் திருமுருகன் காந்திக்கு ஜாமீன்

Published On 2018-08-28 09:20 GMT   |   Update On 2018-08-28 09:20 GMT
தடையை மீறி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசிய வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு தூத்துக்குடி மாஜிஸ்திரேட்டு கோர்ட் ஜாமீன் வழங்கியது. #ThirumuruganGandhi
தூத்துக்குடி:

மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் திருமுருகன் காந்தி. இவர் மீது சென்னையில் தேச துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்ட வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்த நேற்று திருமுருகன்காந்தி சென்னை புழல் சிறையில் இருந்து பாளை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். நள்ளிரவு 1 மணியளவில் திருமுருகன் காந்தி வந்த வேன் பாளை சிறையை வந்தடைந்தது.

பின்பு பாளை சிறையில் அடைக்கப்பட்ட திருமுருகன் காந்தி இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி அழைத்து செல்லப்பட்டார்.

தூத்துக்குடியில் கடந்த மார்ச் மாதம் தடையை மீறி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசியபோது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த‌து. இந்த வழக்கில் திருமுருகன் காந்தி நீதிபதி தமிழ்செல்வி முன்னிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருக்கு நீதிபதி தமிழ் செல்வி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனிடையே மற்ற வழக்குகளில் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர் மீண்டும் சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டார். திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி தூத்துக்குடி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப‌ட்டிருந்தது. #Sterlite #ThirumuruganGandhi
Tags:    

Similar News