செய்திகள்

கட்சி அறிவிப்புக்கு தயாராகும் ரஜினி

Published On 2018-08-28 08:16 GMT   |   Update On 2018-08-28 08:16 GMT
புதிய அரசியல் கட்சியை விரைவில் அறிவிக்க உள்ள ரஜினிகாந்த் கட்சிக்கான தொலைக்காட்சி, நாளிதழுடன் கொடி சின்னம் போன்றவற்றை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார். #RajiniMakkalMandram #Rajinikanth
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். தொடர்ந்து கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் வகையில் மன்றத்தை பலப்படுத்தும் பணிகளில் இறங்கினார்.

அரசியலில் ஒரு பக்கம் கவனம் செலுத்தினாலும் சினிமாவிலும் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அரசியலில் தீவிரமாக இறங்காமல் சினிமாவில் கவனம் செலுத்துகிறாரே என்று அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விரைவில் சில அறிவிப்புகள் வர இருக்கின்றன. இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பகிர்ந்த தகவல்கள்...

ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றுவதற்காக தமிழ்நாடு முழுக்க பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வருகிறது.

சில இடங்களில் இந்த 30 பேர் இலக்கை எட்ட முடியவில்லை. சில இடங்களில் பொய்க்கணக்கு காட்டி இருந்தார்கள். இவர்கள் மீதுதான் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரஜினி பூத் கமிட்டி வி‌ஷயத்தில் அதிக கவனம் காட்டுகிறார். ஒவ்வொரு தெருவிலும் ரஜினி மக்கள் மன்றம் இருக்க வேண்டும் என்று தனது அரசியல் வியூகத்தை அறிவித்த ரஜினிகாந்த், பூத் கமிட்டி என்பதை பலமிக்க கட்சி அமைப்பாகவே கருதியுள்ளார்.

வாக்குச்சாவடி அளவில் அதிகாரப்பூர்வமாக ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் கட்சி மற்றும் ஆட்சி சார்ந்த தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பு இவர்களுக்கு இருக்கும்.

மக்களோடு மக்களாக இருந்து, அவர் சொன்னதைப் போல் ‘காவலர்களாக’ கண்காணிக்கும் பொறுப்பு. பல மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்றத்தின் பூத் கமிட்டி நியமனங்கள் முடிந்துள்ளது. மேலும் சில மாவட்டங்களில் இன்னும் தொடர்கிறது.

இப்போது ரஜினி காந்தைப் பார்த்து மு.க.ஸ்டாலினும் திமுகவுக்கு பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதேபோல தினகரனும் தனது கட்சியை பலப்படுத்த பூத் கமிட்டிகள் அமைத்து வருகிறார்.

ரஜினிகாந்த் சில வி‌ஷயங்களை ரகசியமாக திட்டமிட்டு வருகிறார். அது உறுதியானதும் விரைவில் அறிவிப்புகள் இருக்கும். முக்கியமாக கட்சிக்கு தனியாக சேனல் (டி.வி.) இருக்கவேண்டும். பத்திரிகை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ரஜினியுடன் நெருக்கமாக இருக்கும் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமாக சேனல் ஒன்று இருக்கிறது. பெரிதாக பிரபலமாகாத அந்த சேனலை ரஜினி கையிலெடுத்து தனது கட்சிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். கட்சிக்கு தனியாக பத்திரிகை தொடங்கும் திட்டமும் உள்ளது.

ரஜினி மன்ற நிர்வாகிகள் வி‌ஷயத்தில் அடிக்கடி மாற்றங்கள் நடப்பதால் ரஜினி நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நிறைவடைய இருக்கிறது. அந்த படப்பிடிப்பு முடிந்த உடன் ரஜினி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார்.

திமுக, அதிமுக கட்சிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அவர் கவனித்து வருகிறார். ரஜினி தான் எதிர்பார்த்த சூழ்நிலை அமைந்து வருவதாக நம்புகிறார். எனவே இன்னும் சில வாரங்களில் கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது. கட்சி அறிவிப்பு வெளியிட்ட உடனே தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.

ரஜினி மன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சின்ன புகார் என்றாலும் எந்தவித விசாரணையும் இன்றி நீக்கப்படுகிறார்கள். இது அப்படியே ஜெயலலிதாவின் நடவடிக்கையை போல் உள்ளது. எனவே கட்சி தொடங்கிய பின்னரும் கூட ரஜினி நிர்வாகிகளிடம் இதே கட்டுப்பாட்டை எதிர்பார்ப்பார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்தின் டீசர் ஆகஸ்டு 15-ந்தேதி வெளிவரும் என்று தகவல் வெளியானதால் அன்றைய தினத்தை ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் ஆகஸ்டு 15-ந் தேதி, டீசர் வெளிவரவில்லை. இதற்கு காரணம், கேரளாவின் மழை-வெள்ளம் என இப்போது தெரிய வந்துள்ளது. “கேரள மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் டீசரை வெளியிட வேண்டாம் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். அதனால், டீசர் வெளியீட்டு விழா தள்ளிப்போடப்பட்டது,” என்று இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார். #RajiniMakkalMandram #Rajinikanth
Tags:    

Similar News