செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் ரூ.37 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ரூ.37 லட்சம் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு நேற்றிரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகம்மது சுல்தான் மற்றும் தாஜுதீன் ஆகியோரது உடைமைகளை சோதனை செய்த போது அவர்களிடம் ரூ.37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக தங்கம், வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தங்கம் கடத்தலுக்கு திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளே உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர். இருப்பினும் திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் -வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவம் நடைபெற்று வருவது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.