செய்திகள்

தமிழ்நாட்டில் 2 ஆயிரம் இந்து கோவில்கள் இருந்த இடம் தெரியவில்லை- எச்.ராஜா பேச்சு

Published On 2018-08-17 14:54 GMT   |   Update On 2018-08-17 14:54 GMT
தமிழ்நாட்டில் 2 ஆயிரம் இந்து கோவில்கள் இருந்த இடம் தெரியவில்லை என பாரதீய ஜனதா பிரசார கூட்டத்தில் எச்.ராஜா பேசினார். #hindutemple #hraja #bjp
வேப்பந்தட்டை 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் பாரதீய ஜனதா கட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்க பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் தனபால் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டு கால ஆட்சியில் செய்யாத பல சாதனைகளை பா.ஜ.க. 4 ஆண்டுகளில் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கடைசி 10 ஆண்டு கால ஆட்சியில் மட்டும் 12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. 

பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. 5 கோடி குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக 2 ஆயிரம் இந்து கோவில்கள் இருந்த இடத்தை உரு தெரியாமல் அழித்து, ஆக்கிரமிப்பு செய்து பலர் வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனர். இதையெல்லாம் மீட்பதற்காகத்தான் இந்து கோவில்கள் மீட்பு இயக்கம் தற்போது முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் பேசினார். 

அப்போது எச்.ராஜா முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 30 இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். திருச்சி கோட்ட பொறுப்பாளர் டாக்டர் சிவசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட பொது செயலாளர்கள் சாமிநாதன், இளங்கோவன் ஆகியோர் பேசினர். இதில் பா.ஜ.க. பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொது செயலாளர் சிவராமன் நன்றி கூறினார். #hindutemple #hraja #bjp
Tags:    

Similar News