செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தலில் நடுநிலை வகிப்போம்- திவாகரன் பேட்டி

Published On 2018-08-13 10:15 GMT   |   Update On 2018-08-13 10:15 GMT
திருவாரூர் இடைத்தேர்தலில் நடுநிலையில் இருப்போம். நாங்கள் போட்டியிட வில்லை என்று திவாகரன் தெரிவித்துள்ளார். #Divakaran #dinakaran #thiruvarurelection

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிட கழக கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா திராவிடர் கழகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைகிறார்கள். அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் திராவிட தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி நம்மை விட்டு மறைந்து இருக்கிறார்கள்.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் மட்டுமே நடத்துகிறார். ஆனால் மக்கள் நலனில் அக்கறை இல்லை.

தற்போது காவிரியில் தண்ணீர் வந்தும் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லவில்லை.

சசிகலா செய்த காரியங்கள் தவறாக, கெடுதலாக போய்விட்டது. அவர் சதியில் மாட்டிக் கொண்டார். அதனை மீட்க அண்ணா திராவிட கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

டி.டி.வி. தினகரன் 1 கோடி உறுப்பினர்கள், 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க போவதாக கூறிக்கொண்டு, நலத்திட்டம் என்ற பெயரில் குக்கர் உள்ளிட்ட பொருட்களை லஞ்சமாக கொடுத்து வருகிறார்கள். மக்கள் கூட்டத்தை பணம் கொடுத்து கூட்டப்படுகிறார்கள். இந்த கூட்டத்தை பார்த்து பலர் ஏமாந்து வருகின்றனர்.

தமிழகத்திற்கு ரூ. 4.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. அரசு எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகம் ஆகும். தவறான அரசியல் செய்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

தி.மு.க. தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது தமிழர்களின் கடமை. தியாகம் செய்தவர்கள் மதிக்கப்பட வேண்டும்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது, எங்கள் உடம்பில் அ.தி.மு.க. ரத்தம் ஓடுகிறது, திருவாரூர் இடைத்தேர்தலில் நடுநிலையில் இருப்போம். நாங்கள் போட்டியிட வில்லை.

தேர்தல் தொடர்பாக தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.


டி.டி.வி. தினகரன் அரசியலில் அசிங்கமான சக்தி. ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.25 ஆயிரம் வரை பணம் சென்று கொடுத்தனர்.

தினகரன் பணத்தை கொண்டு அரசியல் செய்கிறார். பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என தினகரன் நினைக்கிறார். ஸ்லீப்பர் செல் ஒன்றும் தினகரனுக்கு கிடையாது.

ஜெயானந்த் திவாகரன் கத்துக்குட்டி என்றால் டி.டி.வி. தினகரன் ஏன் பயப்படுகிறார்?

இவ்வாறு அவர் கூறினார். #Divakaran #dinakaran #thiruvarurelection

Tags:    

Similar News